தொடர்கள்
பொது
"மதராஸ் பாஷை - சும்மா ஒரு சாம்பிள் நைனா" - வேங்கடகிருஷ்ணன்

20250721153521168.jpg

"இன்னா பா , நல்லா கீறியா ? வூட்ல அல்லாரும் சொகமா கீறாங்களா? "
இப்படி ஒரு உண்மையான நலம் விசாரித்தல் சென்னைக்கே உரியது. நம் செந்தமிழ் பல வகையில், அந்தந்த பகுதிகளில் வழக்கு மொழியாக பேசப்பட்டாலும், மதராஸ் பாஷைக்கு தனித்துவம் என்றும் உண்டு, "சென்னை தினம்" கொண்டாடப்படும் இவ்வேளையில் அதன் மொழியை இன்னும் கொஞ்சம்....

மதராஸ் தமிழ், சென்னையில் (முன்னர் மதராஸ்) பேசப்படும் தமிழ் மொழியின் தனித்துவமான வழக்கு மொழியாகும், இது சென்னையின் வரலாற்று, சமூக, மற்றும் கலாச்சார சூழலில் உருவானது. 1639இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மதராஸை ஒரு வணிகத் துறைமுகமாக நிறுவியபோது, இது ஒரு சிறிய மீனவ கிராமமாக இருந்தது.

17ஆம் நூற்றாண்டில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு குடியேறினர், இதனால் பன்மொழி, பன்கலாச்சார சூழல் உருவானது, இது மதராஸ் தமிழின் தோற்றத்திற்கு அடித்தளமாக அமைந்தது.

1700களில், மதராஸ் ஒரு முக்கிய வணிக மையமாக வளர்ந்தபோது, துறைமுகத் தொழிலாளர்கள், வணிகர்கள், மற்றும் குடியேறிய மக்களின் அன்றாட உரையாடல்களில் தமிழ் மொழி, தெலுங்கு, உருது, இந்தி, மற்றும் ஆங்கில மொழிகளின் செல்வாக்கை உள்வாங்கி, தனித்துவமான உச்சரிப்பு மற்றும் சொல்லாட்சியுடன் மதராஸ் தமிழாக உருவெடுத்தது.

சென்னையின் வடபகுதிகளான ராயபுரம், துறைமுகம் மற்றும் ஜார்ஜ் டவுன் போன்ற பகுதிகளில் வாழ்ந்த தொழிலாள வர்க்கத்தினரிடையே இந்த வழக்கு மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.

இவர்களின் வேகமான, நேரடியான பேச்சு முறை மற்றும் பிற மொழி தொடர்புகள் மதராஸ் தமிழின் தனித்தன்மையை வளர்த்தன.19ஆம் நூற்றாண்டில், சென்னை ஆங்கிலேயர்களின் நிர்வாக மையமாக மாறியபோது, மதராஸ் தமிழ் மேலும் வளர்ச்சியடைந்தது. துறைமுகப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் கலப்பு மொழி பயன்பாடு, இந்த வழக்கை ஒரு தனித்துவமான மொழி அடையாளமாக உருவாக்கியது.

20ஆம் நூற்றாண்டில், சென்னையின் நகரமயமாக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியுடன், மதராஸ் தமிழ், குறிப்பாக வட சென்னையின் தெரு மொழியாக, உள்ளூர் மக்களின் அடையாளமாக மாறியது.

இந்த வழக்கு, தமிழின் இலக்கண அமைப்பைப் பின்பற்றினாலும், அதன் உச்சரிப்பு, சொற்பயன்பாடு, மற்றும் வாக்கிய அமைப்பு ஆகியவை தனித்தன்மை வாய்ந்தவை.

பல மொழிகளிலிருந்து வார்த்தைகளை சுருக்கி தன்னுடன் இணைத்துக் கொண்டு வளர்ந்தது மதராஸ் பாஷை. "கஷ்மல " என்னும் சமஸ்க்ருத வார்த்தையிலிருந்து வந்ததுதான் "கஸ்மாலம்" இரண்டுக்கும் ஒரே பொருள் அழுக்கு என்பது தான்.

"நாஷ்டா துண்ணியா?" இந்த நாஷ்டா உருதுவிலிருந்து கடன் வாங்கப்பட்டது. "தபா - முறை " இதுவும் உருதுவிலிருந்து கடன் வாங்கப்பட்டட்டதுதான். "குந்து பா " இது தமிழ் வார்த்தை தான் ஆனால் மதராஸ் பாஷையில் மட்டுமே வழக்கில் இருக்கிறது.

"நீ கண்டி என்னாண்ட ஒர் வார்த்த சொல்லிக்கினு இர்ந்தா" -இதன் அர்த்தம் " நீ என்னிடம் ஒரு முறை இந்த விஷயத்தை பற்றி சொல்லி இருந்தால் " இதில் கண்டி என்பது இணைப்பு சொல்லாக வருகிறது...மற்றொரு முறையில் " நா கண்டி இருந்தன்னு வெச்சுக்க " இங்கே "நான் மட்டும் இருந்திருந்தால் " மட்டும் என்ற பொருள் தரும் வகையில் உபயோகப்படுத்தப்படுகிறது. "Present continuous" ஆங்கிலத்தில் இருப்பது போலவே மதராஸ் பாஷையிலும் உண்டு , போய்க்கொண்டே இருந்தான் என்பதை " போய்க்கினே இர்ந்தான்/கீறான் " என்று சொல்லுவதும், இழுத்துக்கொண்டு வருகிறான் என்பதை "ழ உச்சரிப்பு கடினம் என்பதால் அதனை மாற்றி "இஸ்துக்கினே வர்றான்" என்று சொல்லுவதும் உண்டு. இழுத்தல் என்பதை இன்னொரு வகையில் "வலித்தல் " என்றும் சொல்வதுண்டு. "நல்லா வலி பா " நன்றாக இழு என்று பொருள். இது போல பல உதாரணங்கள் உண்டு, ஆர்வமுள்ளவர்கள் தமிழ் அகராதி மற்றும் வட்டார வழக்கு புத்தகங்களோடு ஆராய்ச்சி செய்யலாம்.

தமிழ் சினிமாவில் NSK துவங்கி சந்திர பாபு, நாகேஷ், மனோரமா, சோ, லூஸ் மோகன், கமலஹாசன் இன்னும் பலரும் மதராஸ் பாஷையை பேசி நடித்து பெருமை சேர்த்துள்ளனர்.

20250721153916295.jpg

என்.எஸ்.கிருஷ்ணன் (NSK):
தமிழ் சினிமாவின் முன்னோடி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான NSK, 1930-40களில் ‘நல்லதம்பி ’ படத்தில் மதராஸ் தமிழைப் பயன்படுத்தி, "கிந்தனார் -கதாகாலட்சேபம் " செய்தார். அதில் அவரே பல வார்த்தைகளுக்கு விளக்கமும் கொடுப்பார். யூடியூபில் இருக்கிறது பார்த்து ரசித்திடுங்கள். சென்னை மக்களின் பேச்சு வழக்கை பிரபலப்படுத்தினார். அவரது நகைச்சுவை, சமூக விமர்சனத்துடன் கலந்து, மதராஸ் தமிழின் இயல்புத்தன்மையை வெளிப்படுத்தியது.

20250721154000184.jpg
சந்திரபாபு: ‘சபாஷ் மீனா’ மற்றும் ‘அந்த நாள்’ போன்ற படங்களில் சந்திரபாபு, மதராஸ் தமிழின் துள்ளலான பேச்சு மற்றும் உடல் மொழியைப் பயன்படுத்தி, தனித்துவமான நகைச்சுவையை வழங்கினார். சபாஷ் மீனாவில் ரிக்சாகாரனாக அவரின் நடிப்பும் பேச்சும், அமர்க்களம். அவரது வேகமான உரையாடல்கள் மற்றும் உச்சரிப்பு மதராஸ் தமிழின் உயிரோட்டத்தை பிரதிபலித்தன.

20250721154142857.jpg
நாகேஷ்: ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி" "சோப்பு சீப்பு கண்ணாடி" "பொம்மலாட்டம்" போன்ற படங்களில் நாகேஷ், மதராஸ் தமிழைப் பயன்படுத்தி, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனித்து நின்றார். அவரது முகபாவனைகள் மற்றும் மதராஸ் தமிழின் இயல்பான பேச்சு, சென்னையின் தெரு மக்களின் அடையாளத்தை பிரதிபலித்தன.

20250721154054423.jpg

மனோரமா: ‘பொம்மலாட்டம்', 'சவால்', 'சம்சாரம் அது மின்சாரம்' ,'திருமலை தென்குமரி ' போன்ற பல படங்களில் மனோரமா, மதராஸ் தமிழைப் பயன்படுத்தி, நகைச்சுவையையும் உணர்ச்சிகரமான காட்சிகளையும் இணைத்து நடித்தார். அவரது வசன உச்சரிப்பு, சென்னையின் உள்ளூர் பெண்களின் பேச்சு முறையை உண்மையாக சித்தரித்தது.

20250721154247762.jpg

சோ: ‘ஜாம் பஜார் ஜக்கு' வாக பொம்மலாட்டம்’படத்தில் மதராஸ் பாஷையில் பொளந்து கட்டியிருப்பார். "தங்கப்பதக்கம்', 'அவன் தான் மனிதன்' போன்ற படங்களில் சோ, மதராஸ் தமிழின் கடினமான உச்சரிப்பு மற்றும் தெரு மொழியைப் பயன்படுத்தி, சென்னையின் கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்தினார். அவரது கதாபாத்திரங்கள், மதராஸ் தமிழின் நேரடியான தன்மையை அதன் நுட்பங்களை பிரதிபலித்தன.

20250721154355969.jpg
லூஸ் மோகன்: மதராஸ் தமிழை மிக இயல்பாகப் பேசிய நடிகர்களில் ஒருவரான லூஸ் மோகன், ‘தங்கமகன்’ மற்றும் ‘நானும் ஒரு தொழிலாளி’ 'குரு' மற்றும் பல படங்களில் , சென்னையின் வடபகுதி மக்களின் பேச்சு வழக்கை தத்ரூபமாக வெளிப்படுத்தினார். ஒரு வார்த்தையை சொல்லி முடிக்கும்போது ஒரு விதமான சத்தம் கொடுத்து முடிப்பது அவரது தனித்துவம்.

20250721154445637.jpg
சுருளி ராஜன் : 'காசேதான் கடவுளடா', 'காசி யாத்திரை' 'திருமலை தென்குமரி' போன்ற படங்களில் தனித்துவமாக வெளிப்பட்டவர். முனியம்மாவை , 'மினிமா' வாக்கியவர்.

20250721154809982.jpg
'தேங்காய்' சீனிவாசன் : "கிருஷ்ணன் வந்தான்' படம் ஒன்று போதும் இவரது திறமையை சொல்ல, அதே போல 'காசேதான் கடவுளடா ' டீக்கடை அப்பாசாமி' மற்றும் 'சுவாமி சுக்ரானந்தா' என இவரின் நடிப்புப் பாய்ச்சல் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

20250721155033342.jpg

கமல்ஹாசன்:'மங்கள வாத்தியம்' "சவால்',"மகராசன்" "எல்லாம் இன்ப மயம்", "பம்மல் கே சம்பந்தம்", "மைக்கேல் மதன காம ராஜன்" போன்ற பல படங்களில் கமல்ஹாசன், மதராஸ் தமிழைப் பயன்படுத்தி, பலதரப்பட்ட கதாபாத்திரங்களை உருவாக்கினார். அவரது வசன உச்சரிப்பு, சென்னையின் உள்ளூர் கலாச்சாரத்தை உலகளவில் அறிமுகப்படுத்தியது.தனக்கு குருவாக அவர் எப்போதும் குறிப்பிடுவது லூஸ் மோகனைத்தான்.

"இது ஸ்டார்டிங் தா கண்ணு , மதராஸ் பாஷையை பத்தி ஆரஞ்சா , அத்தோட பெஷல் இன்னா? ,அத்தோட இஸ்டைல் இன்னா? அது எவ்ளோ நாளா கீது ? பூராத்தையும் பீராஞ்சுக்கலாம். நீ கண்டி , கம்யூட்டர்ல குந்திகினு தேட்னேன்னு வெச்சுக்கோ, அல்லாமே கடிக்கும் ! மெர்சல் ஆவாமே பாரு பா , அப்பால என்னாண்ட சொல்லு பா.."

வர்ர்ட்டா....!!!