19 ஆகஸ்ட் 2025 ,பெய்த பேய் மழையினால் கிடைத்த மழை 891 மி.மீ.
இது ஆகஸ்ட் மாத சராசரி மழை அளவான 560.8 மி.மீயை விட அதிகம்.
கடந்த ஐந்து வருடங்களில் இது அடிகமான மழை அளவாகும்.
இதனால் இந்த வருட மழை சீசனில் அன்று வரை பெய்த மழை அளவு 2,193. 2 மி.மீ.
இப்போதே சராசரி ஆண்டு மழை அளவான 2,101.8 மி.மீயை மிஞ்சி விட்டது.
இன்னும் ஆகஸ்ட் முடிந்த பாடில்லை.
செப்டம்பர் அக்டோபர் இரண்டாம் வாரம் வரை மழை சீசன் பாக்கி இருக்கு.
இன்னும் என்னென்ன ரெக்கார்ட் முறியடிக்கப்படப் போகிறதோ?
கிரிக்கெட்லத் தான் ரெக்கார்ட் உண்டாகுமா என்ன?
அன்று மட்டும் நவி மும்பை உட்பட அனைத்து இடங்களும் சராசரியாக 250 மி.மீ முதல் 300 மி.மீ மழை கொட்டியுள்ளது.
எப்போதும் போல ரயில்வே ட்ராக்குகள் கரை கட்டிய ஆற்று போக்கு வழிகள் மாதிரி தண்டவாளங்கள் மறைந்து போக மரவட்டை பூச்சி ஊர்வது போல ரயில்கள் ஊர்ந்து போயின.
11 இன்ச் முதல் 19 இன்ச் உயரம் வரை பெருக்கடுத்தும் ஆறு மாதிரி மழை நீர் ஓடியது.
மழையினால் மின்சாரம் நின்று போக, அதிக கூட்ட நெரிசலால் நிரம்பிய அந்தரங்கத்தில் நின்று போன மோனோ ரயிலில் இருந்து 582 பயணிகளும் ஒரு வழியாக காப்பாற்றப்பட்டு விட்டனர்.
கிட்டத்தட்ட 23 மணி நேரம் தவித்துப் போயினர்.
மும்பையும் மழையும் இணை பிரியா நண்பர்கள் தான்.
நானும் 45 வருடங்களாக இந்த நகரில் வசித்து வருகிறேன்.
எப்போதும் போல நகருக்குள் சுருக்கப்பட்டு ஓடும் மித்தி ஆறு ஆபத்து நிலையை விட உயரும்.
இரண்டு நாள் ரயில்கள் நிற்கும் அல்லது கால தாமதமாக ஓடும்.
சீசனுக்கு ஒன்றிரண்டு நாட்கள் பள்ளிகள் மூடப்படும். சாந்தாகுரூஸ், சையான் போன்ற ஏரியாக்களில் கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளேட்களுக்குள் மழை புகுந்து விளையாடும்.
சாலைகளில் படகுகள் விடப்படும். யூடியூபர்கள் சாலை ஆறுகளில் நீந்தி மீம்ஸ் போடுவார்கள்.
இருந்தும் அரசு தரப்பு மீட்பு பணிகள் மூலம் இந்த மழையினால் ஏற்படும் தடங்கல்கள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு விடுகின்றன.
இது தான் மும்பையின் மழைக்கால நிகழ்ச்சி நிரல்.
கொசுருக்கு எதிர்கட்சிகள் தங்களை யாரோ மறந்துடப்போறாங்களோ என்று ஆட்சியாளரைக் வாய்க்கு வந்த வார்த்தைகளில் குறை கூறி அறிக்கை விடுவார்கள்.
நகரின் 12 மில்லியன் மக்களுக்கும் இது பழகிப் போய்விட்டது.
உள்ளூர் எஃப் எம் ரேடியோவில் வரும் மாநகராட்சியை நக்கலடித்து வைரலாகும் வீடியோ இதோ.
எது எப்பிடியோ போங்க, இன்றைய நிலவரப்படி மும்பைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் ஏழு ஏரிகள் 95% நிரம்பிவிட்டன.
இன்றும் நகர மக்களுக்கு மஞ்சள் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கலர் கலரா அலார்ட்டுகள்.
மழைக்குப் பயந்து வீட்டுல ஒக்காந்தா வயித்துப்பொழப்பு என்னாறது என்றபடியே அந்தேரி ஷான் சப்வேயருகில் முழங்கால் அளவு நீரிலும் ரயில்வே ஸ்டேஷனுக்கு விரைகிறார் பச்சை மும்பைக்காரன் . இதுதான் மும்பையின் நிலை.
அது சரி, மும்பையில் ஏன் எப்போதும் அதிக மழை பெய்கிறது?
மும்பையின் கடற்கரையோர இருப்பிடம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காற்று நோக்கிய பக்கத்தில் அதன் நிலை காரணமாக பலத்த பருவமழை பெய்கிறது. இது அரபிக் கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று உயர்ந்து அதிக மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது.
சாம்பிளுக்கு இந்த மழையில் மும்பையின் நிலை காட்டும் சில புகைப்படங்கள் கீழே.
இந்த கட்டுரை எழுதி முடிக்கையில் ஜன்னலோரமாக பார்த்தால் மழை அம்பேல் விட்டிருக்கிறது தெரிகிறது.
Leave a comment
Upload