உ
23) ஹாதிவித்யாயை
ஹரித்ரா குங்குமாதிக்தா ஹர்யச்வாத் யமரார்த்சிதா I
ஹரிகேசஸகீ ஹாதிவித்யா ஹாலாமதாலஸா II
அம்பிகை பழுத்த சுமங்கலி என்றுதான் போற்றப்படுகிறாள். ஈசனின் பத்தினியாய் பிரபஞ்ச காலம் தொட்டு காட்சி அளிக்கிறாள். மின்னும் மஞ்சள் பூசி, வட்டப் பொட்டு முழுச் சந்திரனாய் நெற்றியில் ஒளி வீச, தேவர்களால், இந்திரனால் வணங்கப் படுகிறாள்.
அவளை பத்தினியாக அடைந்த பெருமிதமே ஈசனுக்கு உலகை ஆளும் வல்லமை தருகிறது.
எல்லா வித்தைகளுக்கும் அதிபதி அம்பிகை. இவளை வணங்கியே அகத்தியரின் மனைவி லோபாமுத்திரை அம்பாள் உபாசனையில் முதன்மையானவள் ஆகிறாள். அவள் பெயரால் பிரசித்தமான மந்திரம் ஹாதி வித்யை. பஞ்சதசாக்க்ஷரீ மந்திரத்தின் ஆறாவது எழுத்தாகிய ஸகார வடிவானவள்.
அம்பிகைக்கான ஹாதி வித்யா பூஜா விதிமுறைகள் அவளாலும், துர்வாசராலுமே உருவாக்கப் பட்டது.
ஸ்ரீவித்யா உபாசனையில் 12 பேர் மிக முக்கியமான உபாசகர்களாக குறிப்பிடப்படுகிறார்கள். குபேரன், மன்மதன் என்ற வரிசையில் துர்வாசர் மிகவும் முக்கியமானவர். அவர் கோபக்காரராகவும், விரைவில் சாபம் கொடுக்க கூடியவராக இருந்தாலும் அம்பிகை உபாசனையில் அவரே மேலானவராக விளங்குகிறார்.
அவர் உள்ளத்தில் இருந்த அம்பிகையின் ஆணைகளுக்கு ஏற்பவே அவர் செயல்படுகிறார். அவர் அம்பிகையின் மேல் லலிதா ஸ்தவ ரத்தினம், சிந்தாமணி ஸ்தவம் என்று நிறைய ஸ்லோகங்கள் எழுதியுள்ளார்.
இதில் லலிதா ஸ்தவ ரத்தினம் என்பது 200 ஸ்லோகங்கள் அடங்கியது. அம்பிகையின் ஸ்ரீ நகரம், மேருமலையின் தெய்வீக அற்புதங்களையும், அம்பிகையின் அருளையும் விளக்குகிறது.
சிந்தாமணி ஸ்தவம் என்பது அம்பிகையின் அருளைப் பெறுவது பற்றியும் அவளின் அருள் மழையையும் குறிப்பிடுகிறார் துர்வாசர்.
காஞ்சிபுரத்தில் அம்பிகைக்கு எதிரில் ஸ்ரீசக்கரம்,இவரே பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. முதல் பூஜை இவருக்கு.
எழுத்துக்களுக்கு எல்லாம் ஆதியானவள் அம்பிகை. உயிர்மெய் வடிவம் அர்த்தநாரீஸ்வரர். சப்தங்களுக்கு எல்லாம் அவளே மூலமானவள். பிரபஞ்சத்தின் சக்தியாக விளங்குகிறவள் அன்னை பராசக்தி. பிரபஞ்சமே அவள்தான். அணுவிலும் அனுவான ஈசனின் சக்தி அம்பிகை.
அவளின் நாமங்கள் கோடிக்கணக்கானவை. அதிலிருந்து உருவாக்கப்பட்டவை லலிதா சகஸ்ரநாமம், திரிசதீ போன்றவை. அம்பிகையின் ஏராளமான வடிவங்களுக்கு தனித் தனியாக சகஸ்ரநாமம் இருக்கிறது.
புண்ணியம் தேடி மனிதர்கள், கடல்கள், ஆறுகள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுகிறார்கள். ஆனால் எவனொருவன், பராசக்தியின் பாதங்களைத் தஞ்சமடைகிறானோ, அவனைத் தேடி எல்லா புண்ணியங்களும் தாமே வந்து சேருகின்றன.
இதையே அபிராமி பட்டர் “புண்ணியம் செய்தனமே மனமே” என்கிறார். புண்ணியம் செய்த மனத்தால் மட்டுமே அம்பிகையை நினைக்க முடியும். அம்பிகையும், அப்பனும் இணைந்து நம்மைக் காக்கவே இங்கு எழுந்தருளி இருக்கின்றார்கள்.
நமக்காகவே அவர்கள். அவர்களை நம்பியே நாம்.
அம்மையும் அப்பனும் இணைந்திருப்பதே ஜீவன்களுக்கு அருள் செய்யும் நிலை. அவர்களின் கருணையாலேயே, நமக்கு அருள் செய்ய வருகிறார்கள்.
இந்த உலகத்தில் எதுவும் நிலையானது இல்லை. நல்லது, கெட்டது, எல்லாமே நிறைந்து, மாறி, மாறி வருகிறது. அம்பிகையின் கருணையே அதிலிருந்து நம்மைக் காக்கிறது.
அடியவர்களின் திருக்கூட்டத்தில் இணைந்தால் இன்பநிலை தானே வந்தடையும்.
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே
என்று கூறுகிறார் அபிராமி பட்டார்.
தன் தாமரை போன்ற திருவடியை நம் தலைமேல் வைக்கவும் அவள் கருணை வேண்டுமே. அதைத்தானே தேவர்கள் வேண்டுகிறார்கள். தேவர்ஷி கண சங்காத ஸ்தூய மானாத்மா வைபவா என்றுதானே ஸ்ரீலலிதா சொல்கிறது.
நிர்மலமான மனசு உடையவள். எந்த அழுக்கும் சேராமல் ஸ்படிகம் போன்றவள். அதில் தன் அடியவர்கள் மீதான கருணை மட்டுமே இருக்கிறது.
“அம்மா நீயே இந்தப் பிரபஞ்சமனைத்தும் பரிணமித்து இருக்கிறாய். உனக்கு வேறான பொருள் வேறு எதுவும் இல்லை.” என்கிறார் ஸ்ரீசங்கரர்.
இந்த உலகத்தில் உள்ள நீர், நிலம், காற்று,ஆகாயம், மண் என்று அனைத்தும் அம்பிகையே. அவளன்றி வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட அவளே நமக்குள்ளும் நிரைந்திருக்கிறாள். அவளை உணர்ந்து, கொண்டால் துன்பம் என்பது இல்லை.
அவளை உணர அவளையே நாம் துதிக்க வேண்டும். அவள் அருளால்தான் அவளை நாம் உணர முடியும். அவளன்றி எதுவும் சாத்தியமில்லை. அவள்தான் நாம். நாம்தான் அவள்.
*****************************

Leave a comment
Upload